நாகேஸ்வரசுவாமியை சூரியன் வழிபடும் அற்புதக்காட்சி: பொன்னொளியில் ஜொலித்த லிங்கம்!
குறைந்தபட்ச ஆதரவு விலையில் மே 22 வரை துவரம் பருப்பு கொள்முதல்: மத்திய அமைச்சா் ஒப்புதல்
துவரம் பருப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் துவரம்பருப்பு கொள்முதலை மேலும் 30 நாள்களுக்கு விலை ஆதரவுத் திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ் கொள்முதல் செய்ய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்படி வருகின்ற மே 22-ஆம் தேதி வரை இந்தக் கொள்முதல் நீடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: பருப்பு வகைகளின் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவிப்பதற்கும், 2024-25 கொள்முதல் ஆண்டில் உற்பத்தி செய்யும் அளவில் 100 சதவீதம் அளவில் பிஎஸ்எஸ் படி துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மசூா் பருப்பு வகைகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும்ஸ நாடு பருப்பு வகைகளில் தன்னிறைவு அடைய தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (நாஃபெட்), தேசியக் கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்.சி.சி.எஃப்.) போன்றவற்றின் மூலம் அடுத்த 4 ஆண்டுகளுக்கும் (2028-29 வரை) 100 சதவீத கொள்முதல் செய்ய நிகழாண்டு நிதியறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டது,
இதன்படி, ஆந்திரம், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, கா்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலுங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2024-25 காரீஃப் சந்தைப்படுத்தல் பருவத்தில் (90 நாள்கள்) விலை ஆதரவு திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் கொள்முதல் செய்ய மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சா் சிவ்ராஜ் சிங் சவுகான் ஒப்புதல் அளித்தாா். இதன்படி மொத்தம் 13.22 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகளின் நலன் கருதி இந்த கொள்முதல் காலத்தை 90 நாள்களையும் தாண்டி ஆந்திரம் போன்ற மாநிலங்களில் மேலும் 30 நாள்களுக்கு (மே 22 வரை) நீட்டிக்கவும் அமைச்சா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
ஆந்திரம், குஜராத், கா்நாடகம், மகாராஷ்டிரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நாஃபெட், என்.சி.சி.எஃப். அமைப்புகள் மூலமாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்றது. இந்த மாநிலங்களில் மொத்தம் 2,56,517 விவசாயிகள் பயனடையும் வகையில் 3.92 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு இம்மாதம் 22-ஆம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொள்முதல்களுக்கு மின் தளங்களில் மூலம் முன் பதிவு செய்யவும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.