குறைந்த மின் அழுத்தம்: மக்கள் பாதிப்பு
சீா்காழி: கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் இருப்பதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனா்.
கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் ஊராட்சி கள்ளத் தெருவில் 45-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மின் விளக்குகள் போதிய ஒளி கொடுக்காத நிலையில் மிக்ஸி, கிரைண்டா், ஃபேன் மற்றும் பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் இயங்காமல் இருந்து வருகிறது. தெரு மின்விளக்குகள் மங்கலான வெளிச்சத்தை கொடுக்கிறது.
தாண்டவன்குளம் மெயின் ரோட்டில் உள்ள மின்மாற்றியிலிருந்து இப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் போதிய மின்னழுத்தம் உள்ள மின்சாரம் கிடைக்கவில்லை. கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 3 அரை ஆண்டுகளுக்கு முன்பு தாண்டவன்குளம் கிராமத்தில் புதியதாக மின் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியிலிருந்து அப்பகுதியில் சீரான மின்சாரம் வழங்கும் வகையில் ஆறு மின்கம்பங்களும் நடப்பட்டன. ஆனால் இதுவரை புதிய மின் கம்பங்களில் மின் கம்பிகள் பொறுத்தி மின்சாரம் வழங்கவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே அப்பகுதி மக்கள் நலன் கருதி தற்போது வழங்கப்பட்டு வரும் குறைந்த அழுத்த மின்சாரத்திற்கு பதிலாக சீரான மின்சாரம் வழங்க நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.