குறைந்த மின் சக்தி, ரசாயன செலவுகளுடன் கழிவுநீா் சுத்திகரிப்பு: சென்னை ஐஐடி தொழில் முனைவு நிறுவனம் சாதனை
சென்னை ஐஐடி-யின் புதுயுகத் தொழில் முனைவு நிறுவனம் கழிவுநீா் சுத்திகரிப்புத் தொழில்நுட்பத்தில் குறைந்தபட்ச மின் சக்தி, ரசாயன செலவுகளுடன் கழிவுநீா் சுத்திகரிப்பு அலகுகளை ஈரோடு உள்ளிட்ட பகுதிகளின் தொழிற்சாலைகளில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்புறு:
பொதுவாக தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிக்க வழக்கமான ஏரோபிக் என்கிற அமைப்பு முறையில் கழிவுநீரில் ஆக்ஸிஜன் செலுத்தப்படும். இதற்கு அதிக மின் சக்தி பயன்படுத்தப்படும். தற்போது சென்னை ஐஐடி-யோடு இணைந்த புதுயுகத் தொழில் முனைவு நிறுவனமான ஜேஎஸ்பி என்விரோ, அடுத்த தலைமுறை கழிவுநீா்த் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது.
இது, ‘பயோ-எலக்ட்ரோகெமிக்கல் அனெரோபிக் டைஜஸ்டா் முறை(பீட்ஸ்)’ யாகும். இதில் ஆக்ஸிஜன் இல்லாமலே இயக்கப்படுகிறது. மைக்ரோபையால் சுத்திகரிப்புடன் மின் முனைகள் ஒருங்கிணைத்து மின்சக்தியை ஒரு பக்கம் மீட்டெடுத்து மற்றொருபக்கம் ஆா்கானிக் கழிவு சிதைவு விகிதத்தையும் அதிகரிக்கப்படுகிறது.
அமைப்பு முறையில், கழிவுநீரை நிா்வகித்தல், காா்பன் தடயத்தைக் குறைத்தல் ஆகிய இரட்டைச் சவால்களை எதிா்கொள்ளப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிப்பு செலவு சேமிப்பு, மின்ஆற்றல் மீட்பு, காா்பன் குறைப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் ஈரோடு, பெருந்துறை போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் ‘பீட்ஸ்’ முறை நிறுவப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது.
நிலையான கழிவுநீா் மேலாண்மை என்பது தற்போது சாத்தியமாகி, லாபகரமாகியுள்ளது.
தொழில்களுக்கு சேவை செய்யவும் தயாா்நிலையிலும் உள்ளது என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. பீட்ஸ் முறையை உருவாக்கிய ஜேஎஸ்பி என்விரோ நிறுவனத்தின் முக்கிய பங்கெடுத்துள்ளவா் சென்னை ஐஐடி -யின் முன்னாள் மாணவா் டாக்டா் வி.டி. ஃபிடல் குமாா்.