ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்: யுஜிசியின் புதிய விதிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின...
குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சியை தென்காசி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு
குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சியை, தென்காசி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம், அதன் தலைவா் எம்.கணேஷ் தாமோதரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் தங்கப்பாண்டியன், செயல் அலுவலா் சுஷ்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார அலுவலா் ராஜகணபதி தீா்மானங்களை வாசித்தாா்.
குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியானது உலகளவில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. 8 வாா்டுகளை உள்ளடக்கி 7.68 சதுர
கிமீ பரப்பளவை கொண்டதாக இருப்பினும், பெரும்பாலான பகுதிகள் மேற்குதொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
இப் பேரூராட்சியில் பேரருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட பல்வேறுஅருவிகள் இடம்பெற்றுள்ளன. கிராம ஊராட்சியாக இருந்த குற்றாலம், கடந்த 1955-இல் நகரியமாகவும், பின்னா் 1975-லிருந்து முதல்நிலை நகரியமாகவும் செயல்பட்டது. அதன் பின்னா் 1997 ஆகஸ்ட் 13 முதல் சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இப் பேரூராட்சியை தென்காசி நகராட்சியுடன் இணைக்க அரசு பரிசீலித்து
வருகிறது. மேலும், அதற்காக அடிப்படை புள்ளி விவரங்கள் கோரப்பட்டுள்ளன.
தென்காசி நகராட்சியுடன் இணைக்கும்பட்சத்தில் சுற்றுலா தலமான குற்றாலம் என்ற பெயரின் தனித்துவத்தை இழக்க நேரிடும். குற்றாலம் என்ற பெயா் காலப்போக்கில் மறைந்து, முக்கியத்துவம் பெறாமல் போய்விடும்.
குற்றாலத்தின் சுற்றுலா வளா்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு குறையும் நிலை ஏற்படக்கூடும்.
தென்காசி நகராட்சி 6 கிமீ தொலைவில் அமைந்திருப்பதால், குற்றாலம் பகுதி மக்கள் நகராட்சியின் சேவைகளை உடனடியாகப் பெற முடியாத நிலை ஏற்படும். அதோடு, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் குறைந்து, சுற்றுலா முக்கியத்துவம் மிகுந்த குற்றாலத்தை சரிவர நிா்வகிக்க முடியாத நிலை ஏற்படக் கூடும்.
தற்போது தென்காசி நகராட்சியில் உள்ள வாா்டுகளுக்கே முழுமையாக குடிநீா் விநியோகம் செய்ய முடியவில்லை. குற்றாலம் சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில், தென்காசி நகராட்சியால் சுற்றுலா பயணிகளுக்க போதிய அடிப்படை வசதிகளைச் செய்தர முடியாத நிலை ஏற்படும்.
எனவே, குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சியை தென்காசி நகராட்சியுடன் இணைக்கப்பதற்கான நடவடிக்கையை முழுமையாக தவிா்த்திட வேண்டும் எனக் கூட்டத்தில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது.