குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு: பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி
குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்பு குறித்து, திருவாடானை வட்டார வள மையத்தில் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மஞ்சூரில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் இணைந்து இந்தப் பயிற்சி முகாமை நடத்தின. இதில் மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வா் வெள்ளத்துரை தலைமை வகித்தாா். அதன் ஒருங்கிணைப்பாளா் பாரதிராஜா, திருவாடானை வட்டாரக் கல்வி அலுவலா் ஆரோக்கியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 30-க்கு மேற்பட்ட தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைத் தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சி முகாம் ஏற்பாட்டை ஆசிரியா் பயிற்றுநா் ஆறுமுகம், நம்புதாளை அரசு உயா் நிலைப் பள்ளி ஆசிரியா் மாரி ஆகியோா் செய்தனா்.

