சட்டப்பேரவைச் செயலரைச் சந்தித்த அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!
குழந்தை பெற்றால் போனஸ், இலவச பார்ட்டி; சூப்பர் ஆஃபர் வழங்கும் போலந்து ஹோட்டல் - என்ன காரணம்?
போலந்து நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஒரு ஹோட்டல் குழுமம் தனது ஹோட்டலில் தங்கும் தம்பதியினர் குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு பணப்பரிசும், இலவச பார்ட்டிகளும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த வினோத சலுகை, உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.
போலந்தின் மிகப்பெரிய ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆர்ச் (Arche) -ன் தலைவர் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் மக்கள் தொகை குறைந்து வரும் நிலையில் அதனை சரி செய்யும் ஒரு முயற்சியாக தனது நிறுவனம் சமூகப் பொறுப்புடன் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிறுவனத்தின் குழுமத்திற்கு சொந்தமான 23 ஹோட்டல்களில் ஏதேனும் ஒன்றில் தங்கும் குடும்பத்தினர் அந்த காலகட்டத்தில் கருத்தரித்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தையின் பெயர் வைக்கும் விழா அல்லது குடும்ப விழாவை அந்த ஹோட்டலை எடுத்து இலவசமாக நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் பிறக்கும் முதல் குழந்தைக்கு சிறப்பு வரவேற்பு பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் நிறுவனமாக இருப்பதால், இந்த நிறுவனத்திடம் சொத்து வாங்கும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் குழந்தை பெற்றுக் கொண்டால் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் இந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்து கடுமையாக மக்கள் தொகை நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் இந்தச் சலுகை உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது.