England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை வ...
கூடலூர்: போக்கு காட்டும் புலி, கேரளாவிலிருந்து பிரத்யேக கூண்டை வரவழைத்த வனத்துறை - என்ன நடக்கிறது?
நீலகிரி மாவட்டத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்கொள்ளல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நடமாடி வரும் புலி ஒன்று தொடர்ந்து கால்நடைகளை தாக்கி வருகிறது. சுமார் 20 கால்நடைகளுக்கு மேல் வேட்டையாடிய அந்த புலியை பிடிக்க வலியுறுத்தி வனத்துறைக்கு மக்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பிட்ட அந்த புலியின் நடமாட்டம் கண்டறியப்பட்ட தேவர் சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். மேலும், அந்த புலியை உயிருடன் பிடிக்கும் முயற்சியாக 5 இடங்களில் கூண்டுகளை அமைத்துள்ளனர். ஆனால், வனத்துறையின் கூண்டுக்குள் புலி சிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டி வரும் நிலையில், கேரளாவில் இருந்து பிரத்யேக கூண்டு ஒன்றினை வரவழைத்த வனத்துறையினர், அந்த கூண்டை பொருத்தி ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து கூடலூர் வனத்துறையினர், " கால்நடைகளை தாக்கி வரும் இந்த புலி மனிதர்களை தாக்கும் அபாயம் இருப்பதால் இந்த பகுதியில் 55 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

5 கூண்டுகளைப் பொருத்தி கண்காணித்தும் அந்த புலி சிக்கவில்லை . இதனால் , கேரள மாநிலம் நிலம்பூர் வனத்துறை வசம் இருந்த 30 அடி நீளம், 15 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட பிரமாண்ட கூண்டு ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. கொட்டாய் மட்டம் பகுதியில் அந்த கூண்டைப் பொருத்தி கண்காணித்து வருகிறோம். இந்த கூண்டுக்குள் புலி சிக்கும் என நம்புகிறோம். 50 க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் களத்தில் உள்ளனர் " என தெரிவித்தனர்.