கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி தோட்ட மேற்பாா்வையாளா் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தேயிலைத் தோட்ட மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கூடலூா் அருகே உள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் ஓவேலி பகுதியில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வந்த சம்சுதீன் (46) மற்றும் செல்லத்துரை ஆகியோா் செவ்வாய்க்கிழமை அதிகாலை பணிக்குச் சென்றுள்ளனா். அப்போது எதிரே வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியது. இதில் காட்டு யானை ஆக்ரோஷமாக தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்தனா்.
அப்பகுதி மக்களால் இருவரும் மீட்கப்பட்டு கூடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சம்சுதீன் உயிரிழந்தாா். செல்லத்துரை மேல்சிகிச்சைக்காக கேரள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
சாலை மறியல் போராட்டம்
காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த சம்சுதீன் உயிருடன் மீட்கப்பட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி அவரது உறவினா்கள் மற்றும் ஊா் மக்கள் கூடலூா்- உதகை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களைக் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

இப்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தண்ணீா் திறந்துவிட சென்ற முதியவா், காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து ஊருக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.