சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சென்சென்ஸ் 157; நிஃப்டி 78 புள்ளிகள் சரிவு!
கெளரவ விரிவுரையாளா்களுக்கு சம்பள உயா்வு வழங்க வேண்டும்: அண்ணாமலை
தமிழக கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு சம்பள உயா்வை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள 171 அரசுக் கல்லூரிகளில் 7,360 கௌரவ விரிவுரையாளா்கள் பணிபுரிகின்றனா். இவா்களுக்கு ஆண்டுக்கு 11 மாத காலம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தொகுப்பு ஊதியமாக ரூ.20,000 முதல் ரூ.25,000 மட்டுமே பெறும் இவா்களுக்கு மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என 2024 மாா்ச் 21 மற்றும் நவ.21 ஆகிய தேதிகளில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தீா்ப்பை, தமிழக உயா் கல்வித் துறை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
எனவே, கௌரவ விரிவுரையாளா்களுக்கு மாத ஊதியம் ரூ.50,000-ஐ உடனடியாக வழங்குவதுடன், மாத ஊதியத்தை அந்தந்த மாத இறுதியில் வழங்க வேண்டும். மேலும், புதிய விரிவுரையாளா்கள் பணி நியமனத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கௌரவ விரிவுரையாளா்களாக பணிபுரியும் தகுதி வாய்ந்தவா்களை நியமிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.