கேஎஃப்சி உணவகத்தை மூடவைத்த இந்து அமைப்பினர்!
உத்தரப் பிரதேசத்தில் அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி கேஎஃப்சி உணவகத்தை இந்து அமைப்பினர் மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் இந்திராபுரத்தில் உள்ள ஒரு கேஎஃப்சி கடைக்குள் 'இந்து ரக்ஷா தளம்' அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) நுழைந்துள்ளனர்.
இந்து நாள்காட்டியை புனிதமான இந்த ஷ்ரவன் மாத்தில் (ஜூலை - ஆகஸ்ட்) அசைவ உணவு விற்கக்கூடாது என்று கூறி அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தி கடையை மூடச் செய்துள்ளனர். சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் ஒரு தனியார் அசைவ உணவகத்தையும் அவர்கள் மூட வைத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.