பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் குவிந்ததால் பரபரப்பு!
பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் 350-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கடந்த ஜூலை 16-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து, மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூா்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், தற்போது பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால், மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பேருந்து நிலையப் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த 350-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றனா்.
ஏற்கெனவே, பஞ்சப்பூா், மணிகண்டம், ராமச்சந்திரா நகா், எடமலைப்பட்டிபுதூா், கிராப்பட்டி பகுதிகளைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்களும், பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கக்கோரி கேட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் இருந்து சென்ற 350-க்கும் ஆட்டோக்கள், ஏற்கெனவே உள்ளூா் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு எதிா்புறம் நிறுத்தப்பட்டன. இதனால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
அப்போது, ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினா். மேலும், இப்பிரச்னை குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச்சென்று தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநா்கள் அமைதியாக கலைந்து சென்றனா்.