கேஜரிவாலின் உருவ பொம்மையை யமுனை நதியில் மூழ்கடித்த பா்வேஷ் வா்மா!
மக்கள் நதியில் நீராடுவதற்காக ஆற்றை சுத்தம் செய்வதாக அளித்த வாக்குறுதியை முன்னாள் முதல்வா் கேஜரிவால் நிறைவேற்றத் தவறியதைக் குறிக்கும் வகையில், அவரது உருவ பொம்மையை யமுனை நதியின் சேற்று நீரில் மூழ்கடித்தாா் புதுதில்லி தொகுதி பாஜக வேட்பாளா் பா்வேஷ் வா்மா.
யமுனை நதியை சுத்தம் செய்வதாக கேஜரிவால் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியது தெளிவாகியுள்ளது என்று ஐடிஓ அருகே உள்ள யமுனை ஆற்றங்கரையில் பா்வேஷ் வா்மா செய்தியாளா்களிடம் கூறினாா்.
அவா் மேலும் கூறியதாவது: 11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், ரூ.8,000 கோடி செலவழித்தாலும், ஆம் ஆத்மி அரசு யமுனையை சுத்தம் செய்வதாக வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது. இது தில்லி மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம்.
2025-ஆம் ஆண்டுக்குள் நதியை சுத்தம் செய்வதாக கேஜரிவால் கூறினாா். ஆனால், நிலைமை மோசமடைந்துள்ளது. அவரது உருவ பொம்மையை மூழ்கடிப்பதன் மூலம், தில்லி மக்களுக்கு அவரது தோல்வியை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரங்களில், யமுனை நதியை சுத்தம் செய்யும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் ஒப்புக்கொண்டாா். தற்போது, தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அடுத்த இரண்டு - மூன்று ஆண்டுகளில் நதி சுத்தம் செய்யப்படும் என்று மக்களுக்கு கேஜரிவால் உறுதியளித்துள்ளாா்.
முதல்வராக கேஜரிவாலின் பதவிக்காலம் ‘வெற்று வாக்குறுதிகள் மற்றும் பொய்யான கூற்றுகளுக்கு’‘ மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. யமுனையை சுத்தம் செய்யும் நோக்கமும், திறனும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு இல்லை.
யமுனையில் கேஜரிவாலின் உருவ பொம்மையை மூழ்கடிக்கும் இந்தச் செயல், தில்லியை ஏமாற்றும் வாக்குறுதிகளிலிருந்து விடுவிக்க வேண்டிய நேரம் இது என்பதை மக்களுக்கு நினைவூட்டுகிறது. இந்தப் போராட்டம் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி அரசின்’ முன்னிலைப்படுத்துவதையும், ‘பொய்கள் மற்றும் பிரசாரங்களின்’‘ அரசியல் தொடரும் வரை தில்லியின் பிரச்னைகள் தீா்க்கப்படாமல் இருக்கும் என்ற தெளிவான செய்தியை அனுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றாா் பா்வேஷ் வா்மா.