கேரளத்துக்கு வரும் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா! அதிகாரபூர்வ அறிவிப்பு!
மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீன கால்பந்து அணி நட்பு ரீதியான ஆட்டத்துக்கு கேரளத்திற்கு வருவது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பினை ஆர்ஜென்டீன கால்பந்து அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக கேரளத்தில் மிக அதிகம்.
ஆர்ஜென்டீன அணி நட்பு ரீதியான போட்டிகளை வரும் நவ.10, 18ஆம் தேதிகளுக்கு இடையில் கொச்சியில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ஜென்டீன அணிக்கு லியோனல் ஸ்கலோனி பயிற்சியாளராக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் நவம்பரில் மெஸ்ஸியின் அணி கேரளத்தில் விளையாடுமெனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக ஆர்ஜென்டீன அணி 2011-இல் கொல்கத்தாவில் நட்பு ரீதியான போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
2022 உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டீன அணி அடுத்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பையையும் வெல்லும் முனைப்பில் இருக்கிறது.
மெஸ்ஸியும் இன்டர் மியாமியில் சிறப்பாக விளையாடிவருவது நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து ஆர்ஜென்டீன கால்பந்து அமைப்பு கூறியதாவது:
ஆர்ஜென்டீன தேசிய அணி ஸ்கலோனி தலைமையில் இந்தாண்டு இரண்டு நட்பு ரீதியான ஃபிஃபா போட்டிகளில் விளையாடும்.
முதலாவது போட்டி அக்டோபரில் 6-14ஆம் தேதிகளில் அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது.
இரண்டாவது போட்டி நவம்பரில் 10-18ஆம் தேதிகளில் அங்கோலாவின் லுவாண்டாவிலும் இந்தியாவின் கேரளத்திலும் விளையாடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளது.
எதிரணிகள் யார் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.
#SelecciónMayor Información sobre los amistosos internacionales 2025 que afrontará la Selección conducida por Lionel Scaloni.
— Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) August 22, 2025
https://t.co/8HJB8owY9Cpic.twitter.com/gpIjfa3m8b