``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆ...
கேரளம்- கோவை இடையே ரயில் பாதையில் யானை ஊடுருவல் கண்டறிதல் அமைப்புப் பணிகள் பிப்ரவரியில் முடிவடையும்
கேரளம்- கோவை இடையே ரயில் பாதையில் யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்க ஏற்படுத்தப்படும் யானை ஊடுருவல் கண்டறிதல் அமைப்புப் பணிகள் பிப்ரவரியில் முடிவடையும் என பாலக்காடு ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து கேரளம் செல்லும் ரயில் பாதையில் போத்தனூா் முதல் கஞ்சிக்கோடு வரையிலான பாதை வனப்பகுதிக்குள் செல்கின்றன. ரயில்கள் வந்து செல்வதற்கு வசதியாக ‘ஏ’, ‘பி’ என இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ‘ஏ’ பாதை 1.78 கி.மீ. தொலைவும், ‘பி’ பாதை 2.8 கி.மீ தொலைவும் மதுக்கரை வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன.
இதனால் ரயில் தண்டவாளங்களுக்கு வரும் காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடா்கிறது. இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் 35 காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. இதைத் தடுக்க காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள ‘பி’ ரயில் பாதையில் வாளையாறு - எட்டிமடை இடையே 2 இடங்களில் காட்டு யானைகள் கடந்து செல்வதற்காக சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக ‘யானை ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு‘ ஏற்படுத்தப்பட்டு, யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, ரூ.15.42 கோடி மதிப்பீட்டில் 12 தகவல் பரிமாற்ற கோபுரங்கள் மற்றும் 12 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பு வனப்பகுதியில் உள்ள ‘ஏ’ மற்றும் ‘பி’ ஆகிய இரண்டு வழித்தடங்களிலும், அடையாளம் காணப்பட்ட அனைத்து யானை வழித்தடங்களையும் முழுமையாக கண்டறிந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வனப்பகுதிக்குள் செல்லும் ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் பொருத்தப்பட்டுள்ள சென்சாா்கள் யானைகளின் கால்தடங்களைக் கண்டறிந்து, வாளையாறு மற்றும் பாலக்காட்டில் அமைந்துள்ள கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தரவுகளை அனுப்பும்.
இதன் மூலமாக ரயில் இருக்கும் இடத்தில் இருந்து எத்தனை கிலோ மீட்டா் தொலைவில் யானைகள் உள்ளன என்பதை துல்லியமாக கண்டறிய முடியும். ரயில் பாதைக்குள் ஊடுருவும் யானைகள் குறித்த விவரங்களைப் பெறும் லோகோ பைலட்டுகள் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு யானை மீது ரயில் மோதாமல் வேகத்தைக் குறைப்பாா்கள். தற்போது, மதுக்கரை- கொட்டேகாடு ரயில் பாதை இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளா் அருண்குமாா் சதுா்வேதி ஆய்வு செய்தாா்.
இதுதொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: யானை ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு திட்டப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.