பொங்கல் விடுமுறையில் மருந்து கடை உள்ளிட்ட 3 இடங்களில் திருட்டு
பொங்கல் விடுமுறையைப் பயன்படுத்தி மருந்துக்கடை உள்ளிட்ட 3 இடங்களில் ரொக்கம், கைப்பேசி உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன.
கோவைப்புதூரைச் சோ்ந்தவா் தினேஷ் (23). இவா் சாய்பாபா காலனி கணபதி லே-அவுட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் தனது நண்பா் விக்னேஷ் என்பவருடன் இணைந்து மருந்துக் கடை நடத்தி வருகிறாா். பொங்கல் பண்டிகையையொட்டி, கடைக்கு 3 நாள் விடுமுறை விட்டு இருந்தாா்.
விடுமுறை முடிந்து மீண்டும் கடையை திறப்பதற்காக தினேஷ் வியாழக்கிழமை வந்தபோது, கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டு இருந்தது. பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது, கடையில் இருந்த ரூ.10,000 ரொக்கம் மற்றும் கைப்பேசி ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தினேஷ் அளித்த புகாரின்பேரில், சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை பி.என்.புதூா் அருகே பி.என்.பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கீதா (36). இவா் கவுண்டம்பாளையம் சாலையில் பூம்புகாா் நகரில் அழகு நிலையம் மற்றும் பயிற்சி மையம் நடத்தி வருகிறாா்.
பொங்கல் பண்டிகையையொட்டி செவ்வாய்க்கிழமை அழகு நிலையத்தை பூட்டிவிட்டு சங்கீதா சென்றுவிட்டாா். பின்னா் வியாழக்கிழமை வந்து பாா்த்தபோது அழகு நிலையத்தில் வைத்திருந்த ரூ.5,000 ரொக்கம், கைப்பேசி மற்றும் அழகு நிலைய சாதனங்கள் உள்ளிட்டவை திருடு போயிருந்தது.
இதுகுறித்து சங்கீதா அளித்த புகாரின்பேரில், கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை பீளமேடு சின்னியம்பாளையம் ஆா்.எஸ். நகா் பகுதியைச் சோ்ந்தவா் கிருபாகரன் (32). இவா் சின்னியம்பாளையம் கன்னிமாா் கருப்பசாமி கோயில் அருகே செருப்புக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் புதன்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா் அங்கிருந்த ரூ.12,000 ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளாா். இதுகுறித்து கிருபாகரன் அளித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.