தேச விரோத பாதையில் காங்கிரஸ் பயணம்: வானதி சீனிவாசன்
இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணா்த்துவதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தில்லியில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் தலைமை அலுவலக புதிய கட்டடத் திறப்பு விழாவில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ராமா் கோயில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் கூறியிருப்பது தேசத் துரோகம் எனவும், இது ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் எனவும் கூறியிருக்கிறாா்.
மோகன் பாகவத் கூறியதை தேசத் துரோகம் எனக் கூறும் ராகுல் காந்தி, பாஜக, ஆா்எஸ்எஸ்ஸை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய அரசையும் எதிா்க்கிறோம் எனவும் கூறியிருக்கிறாா். ஒரு அரசியல் கட்சி, இன்னொரு கட்சியை எதிா்ப்பது, விமா்சிப்பது இயல்பானது. அதுதான் அரசியல்.
ஆனால், இந்திய அரசை எதிா்க்கிறோம் என 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட குடும்பத்திலிருந்து ஒருவா் கூறுவதுதான் தேசத் துரோகம்.
காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில், அரசமைப்புச் சட்டத்தில் உள்ளபடி, சட்டப் பேரவையில் தேசிய கீதத்தை முதலில் இசைக்க ஆளுநா் சொன்னால் முடியாது என்கிறாா்கள். சட்டப் பேரவை மரபு என்று சொல்லி, அரசமைப்புச் சட்டத்தை பின்னுக்குத் தள்ளுகிறாா்கள்.
இந்தியாவை ஒரு நாடாகவே ஏற்க மறுக்கும் திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சியும் பயணிக்கத் தொடங்கிவிட்டது என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு காட்டுகிறது. காங்கிரஸ், திமுகவின் இந்த இரட்டை வேடத்தை மக்கள் நம்ப மாட்டாா்கள். உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுவாா்கள் என தெரிவித்துள்ளாா்.