US: ``நான் எதிர்க்கட்சிக்காக வேலை செய்கிறேன், ஆனால்..'' - அமெரிக்காவில் சசி தரூர...
கொச்சி: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; மிதக்கும் கண்டெய்னர்கள்.. - பேரிடர் மேலாண்மைக்குழு எச்சரிக்கை
லைபீரியா நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.சி எல்சா-3 என்ற சரக்கு கப்பல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
நேற்று (சனிக்கிழமை) கொச்சி துறைமுகத்துக்கு அந்த கப்பல் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், கொச்சியில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் அரபிக்கடலில் நேற்று மதியம் 1.25 மணியளவில் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
விபத்தைத் தொடர்ந்து கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன. கப்பல் விபத்தில் சிக்கியது குறித்து கோஸ்ட் காட் மற்றும் கடற்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடற்படையின் ஒரு கப்பல் மற்றும் கோஸ்ட் காட்-க்கு சொந்தமான 2 கப்பல்களும் விபத்துக்குள்ளான கப்பல் அருகில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.

மேலும், சிறிய ட்ரோன்கள் மூலம் விபத்துக்குள்ளான கப்பலின் மேல் பகுதி கண்காணிக்கப்பட்டது. கப்பலில் மொத்தம் 24 ஊழியர்கள் இருந்துள்ளனர். அவர்களில் 9 பேர் லைஃப் ஜாக்கெட் அணிந்துகொண்டு கடலில் குதித்து தப்பினர்.
மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படையான கோஸ்ட் காட் மற்றும் இந்திய கப்பற்படை ஆகியன களமிறங்கியுள்ளன.
கடலில் குதித்த 9 பேர் உள்பட 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீத முள்ள 3 பேரும் கப்பலில் பாதுகாப்பாக இருப்பதாகவும். அவர்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் கப்பலில் ஷிப் மாஸ்டராக இருந்துள்ளார். ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒருவர், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 20 பேர், வளைகுடா நாடுகளைச் சேர்ந்த 2 பேரும் கப்பலில் இருந்தனர்.
அந்த சரக்கு கப்பலில் இருந்து கடலில் கண்டெய்னர்கள் விழுந்துள்ளன. அதில் சல்ஃபர் கலந்த மரைன் கியாஸ் மற்றும் ஹைடென்சிட்டி டீசல் ஆகியவை உள்ளன. கடலில் வீழ்ந்துள்ள கண்டெய்மர்களை கண்டால் அதன் அருகில் செல்லவோ, திறக்கவோ கூடாது என பேரிடர் மேலாண்மைக்குழு எச்சரித்துள்ளது.

கடலில் செல்லும் மீனவர்களோ, அல்லது கரை ஒதுங்கும் கண்டெய்னர்களை பொதுமக்கள் கண்டாலோ உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது 112 என்ற எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும். கண்டெய்னர்களை திறக்க முற்படக்கூடாது. அவற்றை திறந்தால் உயிருக்கு ஆபத்தாகும் எனவும் பேரிடர் மேலாண்மை குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.