`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் முன்னாள் வளா்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளா்ப்பு மகன் சுதாகரனிடம் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடா்பாக மாா்ச் 27-இல் விசாரணைக்கு ஆஜராகுமாறு கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளா்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சில நாள்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பியிருந்தனா்.
அதன்படி, கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சுதாகரன் வியாழக்கிழமை ஆஜரானாா்.
அவரிடம் சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகவேல் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா் அளித்த பதில்களை போலீஸாா் விடியோ பதிவு செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பாக மேலும் பலருக்கு அழைப்பாணை அனுப்பப்படவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுதாகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விசாரணையில் என்னிடம் 40 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு தெரிந்த மற்றும் உண்மையான பதில்களைக் கூறியுள்ளேன் என்றாா்.