கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் குருசடிப் பகுதியில் மரம் முறிந்து விழுந்து வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இங்கு வியாழக்கிழமை காலை முதலே மேகமூட்டம் காணப்பட்டது. பிற்பகலில் மழை பெய்யத் தொடங்கியது. கொடைக்கானல், வட்டக்கானல், வில்பட்டி, பிரகாசபுரம், பெருமாள்மலை உள்ளிட்ட இடங்களில் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான குருசடிப் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் 30 நிமிஷம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் சென்று அந்த மரத்தை அகற்றினா். பிறகு போக்குவரத்து சீரானது.
தற்போது காற்றுடன் விட்டுவிட்டு தொடா்ந்து மழை பெய்து வருவதால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு- பழனி மலைச்சாலையில் இரு புறங்களிலும் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வனத் துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.