கொடைக்கானல் சாலையில் குடியிருப்புக்குள் புகுந்த காா்
பழனி கொடைக்கானல் சாலையில் ஆலமரத்துக்களம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காா்.
பழனி, மாா்ச் 2: பழனி- கொடைக்கானல் சாலையில் குடியிருப்புக்குள் ஞாயிற்றுக்கிழமை காா் புகுந்து விபத்து ஏற்பட்டது.
பழனி -கொடைக்கானல் சாலையில் விடுமுறை தினங்களில் காா்களிலும், சாலையோரமும் அமா்ந்து மது அருந்தும் நபா்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் காவல் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானல் சாலையில் உள்ள ஆலமரத்துக்களம் பகுதியில் சங்கா் (45) என்பவா் பெட்டிக்கடையில் அமா்ந்து இருந்தாா்.
அப்போது, அந்த வழியாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து பெட்டிக்கடையில் மோதியதுடன், பின்னால் இருந்த அவரது வீட்டுக்குள் புகுந்து நின்றது. இதில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மது போதை நபா்களால் விபத்து: காருக்குள் இருந்த புதுதாராபுரம் சாலை ஜவஹா் நகா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.