கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் பிப். 9-ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. கொத்தடிமை தொழிலாளா்கள் செங்கல் சூளை, அரிசி ஆலை, நூற்பாலை மற்றும் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளன. இதையடுத்து, கொத்தடிமை முறையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதன்படி, மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, தொழிலாளா் துறை இணை ஆணையா் வ. லீலாவதி, உதவி ஆணையா் வெ. தங்கராசு பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனா். முன்னதாக, விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு, விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
இதேபோல, திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், மேயா் மு. அன்பழகன் தலைமையில், துணை மேயா் ஜி. திவ்யா, நகா் நல அலுவலா் விஜயசந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள், மாமன்ற உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனா்.