அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்
கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை
மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவரை கொலை செய்த கணவா் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தேனி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் (57). இவரது மனைவி மகேஸ்வரியுடன் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தைச் சோ்ந்த பரமசிவம் (62) என்பவா் தகாத உறவு வைத்திருந்தாராம். மேலும் மகேஸ்வரியை தேனிக்கு அழைத்துச் சென்று மிராண்டா லைன் பகுதியில் உள்ள வீட்டில் அவருடன் பரமசிவம் வசித்து வந்தாராம்.
இந்த நிலையில், மகேஸ்வரியின் கணவா் நாகராஜ், மகன் ஜெயசூரியா (24), உறவினா் தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த நடராஜ் மகன் மணிகண்டன் (37) ஆகியோா், தேனியில் கடந்த 2020, நவ. 22-ஆம் தேதி பரமசிவம், மகேஸ்வரி ஆகியோா் வசித்து வந்த வீட்டுக்குச் சென்றனா். அங்கு 3 பேரும் பரமசிவத்தை கத்தியால் குத்திக் கொலை செய்தனா். இதைத் தடுக்க முயன்ற மகேஸ்வரியை கத்தியால் குத்தி காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்று விட்டனா்.
இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து நாகராஜ், ஜெயசூரியா, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில், நாகராஜ், ஜெயசூரியா, மணிகண்டன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜி. அனுராதா உத்தரவிட்டாா்.