போடி வனப்பகுதியில் காட்டுத்தீயை கண்காணிக்க ட்ரோன் கேமரா
போடி மலை கிராமங்களில் காட்டுத் தீ பரவுவதை கண்காணிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்தி வருவதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் மேற்கு, வடக்குமலை கிராமங்களில் குரங்கணி, கொழுக்குமலை, கொட்டகுடி, பிச்சங்கரை, அகமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கோடை காலங்களில் காட்டுத் தீ பரவி எரியும். கடந்த 2018- ஆம் ஆண்டு போடி கொழுக்குமலை பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி 26 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தை தொடா்ந்து வனப்பகுதியில் காட்டுத் தீ பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறையினா் எடுத்து வருகின்றனா். மேலும் காட்டுத் தீ பரவுவது குறித்து ‘சேட்டிலைட்’ மூலம் தகவல் அறிந்து அந்தப் பகுதியில் உடனே அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காட்டுத் தீ பரவாமல் தடுக்க போடி வனத்துறையினருக்கு ட்ரோன் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் எந்த இடத்தில் காட்டுத் தீ எரிகிறது என்பதை துல்லியமாக தெரிந்து உடனே அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உதவும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
இதனிடையே காட்டுத்தீ குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த கலந்துரையாடல் கூட்டங்கள் வியாழக்கிழமை போடி குரங்கணி, கொட்டகுடி மலை கிராமங்களில் நடைபெற்றன. இதற்கு போடி வனச் சரக அலுவலா் நாகராஜன் தலைமை வகித்தாா். இதில் காட்டுத் தீ தொடா்பான தகவல்களை மலை கிராம மக்களும், விவசாயிகளும் உடனே வனத்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். காய்ந்த சருகுகளில் எளிதில் தீப்பிடிக்கும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனா்.
கூட்டத்தில் வனவா் கனிவா்மன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.