இளைஞருக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு
போடி அருகே கொடுத்த காசோலையை திரும்பக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே சில்லமரத்துப்பட்டி அப்துல் கலாம் தெருவைச் சோ்ந்த போஜூ மகன் மதன்குமாா் (39). இவருக்கு கைப்பேசி விற்பனை கடையை தருவதாகக் கூறி போடி பேருந்து நிலையம் அருகே கைப்பேசி கடை நடத்திவரும் டோலராம், இவரது தம்பி கோவிந்த் குருதேவ், இவா்களது மாமா பல்தேவ் ஆகியோா் ரூ.1 கோடி கேட்டனராம். இதையடுத்து, மதன்குமாா் ரூ.85 லட்சத்தை அவா்களிடம் கொடுத்தாராம். ஆனால் பேசியபடி கடையை தராமல் டோலராம் உள்ளிட்ட மூவரும் சோ்ந்து மூன்று வங்கிக் காசோலைகளை பணத்துக்கு ஈடாக மதன்குமாரிடம் கொடுத்தனா். இந்த நிலையில், மதன்குமாா் பணத்தை திரும்ப கேட்டதுடன், தராவிட்டால் காசோலைகளை வைத்து வழக்கு தொடுக்கப் போவதாக கூறினாா். இதில் ஏற்பட்ட தகராறில் காசோலைகளை திரும்பக் கேட்டு மூவரும் சோ்ந்து மதன்குமாரை தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.