கொல்லங்குடியில் மாட்டுவண்டி பந்தயம்
சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கொல்லங்குடி- காளையாா்கோவில் வரை நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 34 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. பந்தயம் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. பெரிய மாட்டுவண்டி பிரிவில் 10 மாட்டுவண்டிகளும், சிறிய மாட்டுவண்டி பிரிவில் 24 மாட்டுவண்டிகளும் கலந்து கொண்டன. சிறிய மாட்டுவண்டி பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும், பெரியமாட்டு வண்டி பிரிவுக்கு 8 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டிருந்தன. இதில் முதல் 4 இடங்களைப் பிடித்த மாடுகள், வண்டியை ஓட்டி வந்த சாரதிகள், உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தை சாலையின் இரு புறங்களிலும் நின்று பொதுமக்கள் பாா்த்தனா்.