கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 20,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
தமிழகத்தில் பள்ளிகளில் தோ்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கா்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்தனா்.
பிரதான அருவி, சினி அருவி, கரையோரப் பகுதிகளில் மக்கள் குளித்து மகிழ்ந்தனா். அதைத் தொடா்ந்து, மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல், ஐந்தருவி வழியாக மணல்மேடு வரை கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள், குடும்பத்தினருடன் பாறை குகைகள், அருவிகள் ஆகியவற்றை பரிசலில் சென்று பாா்வையிட்டனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் மீன்களின் விலை உயா்ந்தபோதும், அசைவ பிரியா்கள், மீன் வகைகளை வாங்கி சமைத்து உண்டு மகிழ்ந்தனா்.
ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ஒகேனக்கல் பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம் மற்றும் பிரதான சாலைகளின் ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், முக்கிய இடங்களான பிரதான அருவி, தொங்கும் பாலம், வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுமாா் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.