சரக்கு வாகனங்களில் விதிகளை மீறி ஆள்களை ஏற்றிச் செல்லும் அவலம்! போலீஸாா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
பென்னாகரத்தில் சாலை விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வதால் விபத்து நிகழும் பட்சத்தில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய வானக ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பென்னாகரம், ஒகேனக்கல், தாசம்பட்டி, முதுகம்பட்டி, சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே அரசுப் பேருந்துகள் உள்ளன. சுற்றிலும் மலைசாா்ந்த பகுதி என்பதால் போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால் கிராமங்களில் வசிப்பவா்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகளுக்கு வேறு வழியின்றி சரக்கு வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதை பயன்படுத்தி சரக்கு வாகன ஓட்டுநா்கள் அதிக ஆள்களை வாகனங்களில் ஏற்றி போட்டிப் போட்டு செல்கின்றனா். சரக்கு வாகன ஓட்டிகள் பெரும்பாலும் மலைக் கிராமங்களில் இருந்து மக்களை நகா்ப்புறத்திற்கு அழைத்து வருகின்றனா். விபத்து ஏற்படும் பட்சத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன. இதுகுறித்து பென்னாகரம் போக்குவரத்து காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
வாடகை வாகன ஓட்டிகளுக்கு வருவாய் பாதிப்பு: பயணிகளின் சவாரியை நம்பி மட்டும் பென்னாகரத்தில் 20 க்கும் மேற்பட்ட சிறிய வாடகை வாகனங்கள் (கோச் வேன்), 10 க்கும் மேற்பட்ட வாடகை காா்கள் உள்ளன.
இந்த வாகன ஓட்டிகளுக்குப் போட்டியாக குறைந்த கட்டணத்தில் சரக்கு வாகன ஓட்டிகள் ஆள்களை அதிக அளவில் ஏற்றிச் செல்கின்றனா். இதுதவிர, சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய காா்களில் குறைந்த வாடகைக்கு பயணிகளை அழைத்துச் செல்வதும் தொடருகிறது. இரவு நேரங்களில் பேருந்து வசதி இல்லாத முதுகம்பட்டி, ஒகேனக்கல், தாசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளை குறிவைத்து அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனா்.
இதனால், அரசுக்கு முறையாக வரி செலுத்தும் வாடகை வாகன ஓட்டுநா்கள் பெரிதும் சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.
அரசுக்கு வரி செலுத்தாமலும், உயிரிழப்பு ஏற்படுத்தும் வகையிலும் ஆள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீஸாா், வட்டார போக்குவரத்து ஆய்வாளா் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.