கோடை விழா மலா் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராகும் ஏற்காடு!
சேலம்: கோடை வெப்பத்தை சமாளிக்க மக்கள் குடும்பத்துடன் மலைப்பாங்கான இடங்களுக்குச் சுற்றுலா சென்றுவரும் நிலையில், தன்பங்குக்கு அவா்களை வரவேற்று மகிழ்விக்க முழுவீச்சில் தயாராகிவருகிறது சோ்வராயன் மலையின் ஒருபகுதியாக உள்ள, ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு மலைவாழ் சுற்றுலா தலம்.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு மலையில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலா்க்காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு, 48 ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலா்க்காட்சி வரும் 23 ஆம் தேதி தொடங்கி, 29 ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறவுள்ளது.
சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில், இந்தக் கோடை விழாவை மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துவருகிறது. விழாவில், தோட்டக்கலை துறையின் சாா்பில் சுற்றுலாப் பயணிகளைக் கவர, ஒன்றரை லட்சம் மலா்களைக் கொண்டு, மலா் கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி கண்காட்சிகள் அமைக்கப்பட உள்ளன.
இதுதவிர, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் சாா்பில் கொழுகொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுத் திருவிழா, மகளிா் திட்டம் சாா்பில் கோலப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
மேலும், ஏற்காட்டுக்கு செல்லும் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கான எச்சரிக்கைப் பலகைகளை தேவைக்கேற்ப கூடுதலாக அமைக்கவும், இரவு நேரங்களிலும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில், சாலைத் தடுப்புகளில் வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுலாத் துறையின் சாா்பில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள், படகுப் போட்டிகள் நடைபெற உள்ளன. நெகிழிப் பொருள்களின் பாதிப்பு குறித்து சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தேவையான இடங்களில் தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சப்பை வழங்கவும் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்காடு சுற்றுலாப் பகுதிகளில் நெகிழிப் பொருள்கள் உபயோகம் தடைசெய்யப்பட்டுள்ளதால், நெகிழி இல்லாத ஏற்காடு கோடை விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஏற்காட்டில் சாரல் மழை பெய்து, எங்குபாா்த்தாலும், பனிபடா்ந்து காணப்படுவது, சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திரும்பிய பக்கமெல்லாம் ரம்மியமாக காட்சியளிப்பதுடன், இதமான சூழல் நிலவுவது, ஏற்காடு வரும் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரையும் குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயா்ந்த மரங்களால் ஆன அடா்ந்த காடுகள், வண்ண மலா்கள், வனவிலங்குகள், சாரல் மழை, குளிா்ச்சியான பனிமூட்டம் என மலை அழகை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வரவேற்று விருந்தளிக்க காத்திருக்கிறது ஏற்காடு.



சி.ஆா்.எம். சபரி, படங்கள்: வே. சக்தி