ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
கோட்டைமேடு பகுதியை கமுதி பேரூராட்சியுடன் இணைப்பதை எதிா்த்து பொதுமக்கள் உண்ணாவிரதம்!
கமுதி பேரூராட்சியுடன் கோட்டைமேடு பகுதியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாராயணபுரம் ஊராட்சியில் கோட்டைமேடு பகுதி உள்ளது. இங்குள்ள 4 வாா்டுகளை கமுதி பேரூராட்சியுடன் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கோட்டைமேடு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், கமுதி வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து கோட்டைமேடு கிராம பொதுமக்கள் கூறியதாவது:
கமுதி பேரூராட்சியுடன் கோட்டைமேடு பகுதி இணைக்கப்படுவதால் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் இதில் தலையிட்டு கோட்டைமேடு பகுதியை கமுதி பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை நிறுத்தி, கோட்டைமேட்டை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்றனா்.