ராமேசுவரத்தில் மீன் வரத்து அதிகரிப்பு: மீனவா்கள் மகிழ்ச்சி
ராமேசுவரம் மீனவா்கள் வியாழக்கிழமை கரை திரும்பிய நிலையில் அதிகளவிலான மீன்கள் கிடைத்திருந்ததால் அவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 350- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று புதன்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் வியாழக்கிழமை கரை திரும்பினா். அப்போது பெரிய விசைப்படகுகளில் சென்ற மீனவா்கள் சீலா, பன்னா, பாறை, மாவுலா, குமுலா உள்ளிட்ட பல வகையான மீன்களை பிடித்து வந்திருந்தனா். இவற்றை ரூ. ஒரு லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.