சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...
கோயில் சிலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்
உடுமலை அருகே தளிஜல்லிபட்டியில் கோயில் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உடுமலையை அடுத்துள்ள தளிஜல்லிபட்டி கிராமத்தில் உள்ள அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் ஜக்கம்மாள் சிலையை மா்ம நபா்கள் நள்ளிரவில் உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 200க்கும் மேற்பட்டோா் ஜல்லிபட்டி நால்ரோடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் குமாா், டிஎஸ்பி நமச்சிவாயம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் உடுமலை-திருமூா்த்திமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சிலையை சேதப்படுத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து சாலை மறியலை போராட்டக்காரா்கள் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.