கோலிக்கே 4-வது இடம்தான்; சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகையை விட அதிக சம்பளம் பெறும் 6 IPL வீரர்கள்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் (இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும்) தொடங்கவிருக்கிறது. ஒருநாள் போட்டியில் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படுகிறது. மார்ச் 9-ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி முடிந்த அடுத்த இரண்டு வாரத்தில் இந்தியாவில் ஐ.பி.எல் தொடங்குகிறது.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ. 19.45 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்திருக்கிறது. இவ்வாறிருக்க, சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை விட ஐ.பி.எல்லில் ஆறு வீரர்கள் அதிகம் சம்பளம் பெறுவது தற்போது தெரியவந்திருக்கிறது. அந்த ஆறு பேரில் நான்கு பேர் இந்திய வீரர்கள். இரண்டு பேர் வெளிநாட்டு வீரர்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்...
1. ரிஷப் பண்ட் - ரூ. 27 கோடி
2022-ல் கார் விபத்துக்குள்ளான பண்ட், 2024-ல் முழுமையாகக் குணமடைந்து கடந்த ஐ.பி.எல் சீசனில் டெல்லி அணியின் கேப்டனாகக் கம்பேக் கொடுத்தார். இருப்பினும், கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஐ.பி.எல் மெகா ஏலத்துக்கு முன்பாக டெல்லி அணியிலிருந்து தாமாக வெளியேறி ஏலத்தில் பெயரைப் பதிவுசெய்தார். அப்போதே, ஏலத்தில் பண்ட்தான் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று பேச்சுகள் அடிபட்டன. அதற்கேற்றாற்போல, ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்.

2. ஸ்ரேயாஸ் ஐயர் - ரூ.26.75 கோடி
கடந்த ஐ.பி.எல் சீசனில் ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையில்தான் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனாலும், மெகா ஏலத்துக்கு முன்பாக கொல்கத்தா அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதில், ரிஷப் பண்ட்டுக்கு அடுத்த அதிகபட்ச தொகையாக ரூ. 26.45 கோடிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது.
3. வெங்கடேஷ் ஐயர் - ரூ. 23.75 கோடி
ஐ.பி.எல்லில் கடந்த சில ஆண்டுகளாகக் கொல்கத்தா அணியில் நிலையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் ஐயரும் ஏலத்துக்கு முன்பாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் ஏலத்தில் அதே கொல்கத்தா அணியால் ரூ. 23.74 கோடிக்கு வாங்கப்பட்டார்.

4. ஹென்ரிச் க்ளாசென் - ரூ. 23 கோடி
கடந்த ஐ.பி.எல் சீசனில் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முக்கியப் பங்காற்றிய தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் ஹென்ரிச் க்ளாசென். இவரை ஏலத்துக்கு விடாமல் ரூ. 23 கோடிக்கு ஐதராபாத் அணி தக்கவைத்துக் கொண்டது.

5. விராட் கோலி - ரூ. 21 கோடி
2008-ல் ஐ.பி.எல் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுநாள் வரைக்கும் ஒரே அணியில் ஆடிவரும் விராட் கோலியை பெங்களூரு அணி ஏலத்துக்கு விடாமல் ரூ. 23 கோடிக்கு தக்கவைத்திருக்கிறது
6. நிகோலஸ் பூரான் - ரூ. 23 கோடி
வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரானை ரூ. 21 கோடிக்கு லக்னோ அணி ஏலத்தில் விடாமல் தக்கவைத்துக்கொண்டது.