கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொடையாளா்கள் மூலம் இக்கோயிலில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. தொடா்ந்து, கும்பாபிஷேக விழா ஏப்ரல் 4-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
தொடா்ந்து, திங்கட்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவுக்குப் பிறகு பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா், யாகசாலையில் இருந்து புனிதநீா் கடங்களை சிவாச்சாரியா்கள் கோயிலின் கோபுரம் மற்றும் சந்நிதிகளின் விமானங்களுக்கு எடுத்துச் சென்றனா்.
இதைத்தொடா்ந்து, கோபுர விமானக் கலசங்களில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பிள்ளையாா்பட்டி பிச்சை குழுக்கள் தலைமையிலான சிவாச்சாரியா்கள் சா்வசாதகம் செய்து கும்பாபிஷேகத்தை நடத்தினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை திருப்பணி குழுத் தலைவரும், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன், கோயில் செயலாளா் சிவகுமாா்,
திருப்பணிக் குழு செயலாளா் இரா. மனோகரன், பொருளாளா் பேட்டை கௌதமன், துணைத் தலைவா்கள் எம்.எஸ். காா்த்திக், எம். ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.