Doctor Vikatan: 4 கிலோ எடையில் பிறந்த குழந்தை... பின்னாளில் உடல்பருமன் பிரச்னை வ...
கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: இனாம் மணியாச்சி மக்கள் மனு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து இனாம் மணியாச்சி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். இக்கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் விவரம் வருமாறு:
இனாம் மணியாச்சி பகுதி மக்கள்: கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டமானது, பெரும்பாலான பெண்களின் வாழ்வாதாரமாக உள்ளது. தற்போது இனாம்மணியாச்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைத்தால் இத்திட்டம் மூலம் எங்களுக்கு பயன் இல்லாமல் போகும். எனவே, இனாம்மணியாச்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிடவேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை பகுதியில் ஏற்படும் கடல் அரிப்புக்கு காரணமாக உள்ள உடன்குடி அனல்மின் நிலையத்திற்காக கல்லாமொழி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் துறைமுக பணியை நிறுத்த வேண்டும். மேலும், விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடா் மக்கள் சுமாா் 200 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும், நிலத்தை சிலா் ஆக்கிரமிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனா். இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய தீா்வு வழங்க வேண்டும். இல்லாவிட்டால், வரும் 26ஆம் தேதி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்துவோம்.
சிறுத்தொண்டநல்லூா் பொதுமக்கள்:தூத்துக்குடி மாவட்டம் காமராஜநல்லூா் அருகே உள்ள சிறுத்தொண்ட நல்லூா் பகுதியில் வசித்து வரும் எங்களுக்கு, இப்பகுதியில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் சிலா் கடந்த 13ஆம் தேதி ஆக்கிரமித்து, அங்குள்ள மரங்களை வெட்டி, சமாதிகளையும் இடித்துள்ளனா். எனவே, மயானத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.