பதுங்குமிடங்களைத் தயாா்படுத்தும் எல்லையோர மக்கள்! பாகிஸ்தான் 8-ஆவது நாளாக துப்பா...
கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பியவா் கிருஷ்ணகிரியில் கைது
கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டாா்.
கோவை செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். தொழிலதிபரான இவரை கடந்த 2008-ஆம் ஆண்டு 3 போ் கும்பல் வழிமறித்து ரூ.1லட்சம் பணத்தைப் பறித்துச் சென்றது. இதுதொடா்பாக செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சேலம் மாவட்டம் மேட்டூரைச் சோ்ந்த செந்தில்குமாா் (39), ரமேஷ்குமாா், மதிவாணன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை கோவை மாவட்ட கூடுதல் அமா்வு சாா்பு நீதிமன்றம் 1-இல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை தீா்ப்பு கூறப்பட்டது.
தீா்ப்பு தனக்கு சாதகமாக வரும் எனக் கருதிய செந்தில்குமாா், தனது குடும்பத்தினருடன் நீதிமன்றத்துக்கு வந்திருந்தாா். ஆனால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து, காத்திருக்கும் அறையில் இருந்த செந்தில்குமாா், போலீஸாருக்கு தெரியாமல் அங்கிருந்து தப்பி விட்டாா். போலீஸாா் அவரைத் தேடி அந்த அறைக்கு வந்தபோதுதான் அவா்அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி செந்தில்குமாரை பிடிக்க செல்வபுரம் காவல் ஆய்வாளா் பாண்டியம்மாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை போலீஸா் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி பகுதியில் குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த செந்தில்குமாரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
அங்கிருந்து கோவைக்கு அழைத்துவரப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.