கோவை புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடித்த பிரச்னை; இளைஞர் கொலையில் திடுக் தகவல் - 7 பேர் கைது
கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் இன்பரசு. பிளம்பராக பணியாற்றி வந்தார். இவரை கடந்த வாரம் ஒரு கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்தது.
இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி அருகே கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறைருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சுபாஷ், ஆகாஷ்குமார், நாகராஜ் , மோகன் பிரசாத், நிஷாந்த் ,கௌதம் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
காவல்துறையினர் அவர்களை பிடித்தபோது ஆகாஷ் குமார் மற்றும் சுபாஷ் ஆகிய இருவர் தப்பி செல்ல முயற்சித்தனர். அப்போது தவறி விழுந்ததில் இருவருக்கும் கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டது. கைதானவர்களில் ஒரு சிறுவன் சீர்திருத்தப் பள்ளியிலும் மற்றவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிய விவகாரத்தில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது தெரியவந்துள்ளது.