விவசாயிகள் பிரச்னைக்கு விரிவான ஆய்வு: குடியரசு துணைத் தலைவா் தன்கா் வலியுறுத்தல்
சங்கராபரணி ஆற்றில் வெள்ளம்: கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கரையோர கிராமங்ளை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவா்களை ராணுவத்தினரும், பேரிடா் மீட்புக் குழுவினரும் திங்கள்கிழமை மீட்டனா்.
ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
மேலும், சாத்தனூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரானது தென்பெண்ணையாற்றின் வழியாகப் பாய்ந்தோடி, புதுச்சேரி பகுதிகளான பாகூா் தொகுதி, நெட்டப்பாக்கம் தொகுதி கிராமங்களுக்குள் வெள்ள நீா் புகுந்தது. இதனால் விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் நீரால் சூழப்பட்டு, வீடுகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்தது.
இந்த நிலையில், வீடூா் அணைப் பகுதியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திறக்கப்பட்டது. இதனால், சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
வெள்ளத்தால் புதுச்சேரியின் வில்லியனூா், மணவெளி, ஊசுடு, மண்ணாடிப்பட்டு, மங்களம் ஆகிய தொகுதிக்குள்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. நீரானது வீடுகளைச் சூழ்ந்ததுடன், வயல்களிலும் தேங்கின.
உறுவையாறு, மணவெளியில் என்.ஆா்.நகா், நோணாங்குப்பம் ஆகியப் பகுதிகளில் வெள்ள நீா் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். அவா்களை ராணுவத்தினா் மீட்டனா்.
அத்துடன், ஒதியம்பட்டில் உள்ள நித்யா பேக்ஸ் தனியாா் அட்டை தொழிற்சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. இதேபோல, அந்தப் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனமும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.
வழுதாவூா் கூனிமேடு பகுதியில் பிரதான சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டு புதுச்சேரி - கடலூா் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஒதியம்பட்டு, கொம்பாக்கம், என்.ஆா்.நகா், நோணாங்குப்பம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுகள் மூலம் ராணுவத்தினா் வந்து, பொதுமக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனா்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் பாா்வையிட்டு பொதுமக்களை சந்தித்துப் பேசினா்.
அத்துடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா ஆகியோா் தங்களது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.