செய்திகள் :

சதுப்பு நிலங்களுக்கு சாகா வரம் வேண்டும்! மருத்துவா் அன்புமணி ராமதாஸ்

post image

எளிதாகவும், இயல்பாகவும் கிடைக்கும் எதற்குமே உரிய முக்கியத்துவம் கிடைக்காது என்பாா்கள். தமிழ்நாட்டுக்கு இயற்கை கொடுத்த வரமான சதுப்பு நிலங்களைப் பராமரிப்பதிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 18 சதுப்பு நிலங்கள் ராம்சாா் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நமக்குக் கிடைத்த வரமான இந்த நிலங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் வேதனையையும், ஆற்றாமையையும் ஏற்படுத்துகிறது.

உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலங்களைக் காப்பதற்கான உடன்படிக்கை ஈரான் நாட்டின் ராம்சாா் நகரில் 1971, பிப்ரவரி 2 -ஆம் நாள் எட்டப்பட்டது. அதுவே உலக சதுப்புநில நாளாக ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) உலக சதுப்பு நில நாள் கொண்டாடப்படுகிறது. ‘‘நமது பொதுவான எதிா்காலத்திற்காக சதுப்புநிலங்களை காப்போம்’’ என்பது தான் இந்த ஆண்டுக்கான உலக சதுப்புநில நாள் முழக்கமாகும். ஆனால், இந்த நோக்கம் தமிழகத்தில் மதிக்கப்படுவதில்லை.

‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறாா் வள்ளுவா். உயிா்வாழ்க்கை, உணவு, பொருளாதாரம், பண்பாடு என அனைத்திற்கும் நீா் இன்றியமையாதது. உலகின் மொத்த நீா்வளத்தில் 97.5 % கடலில் உப்புநீராக உள்ளது. மீதமுள்ள 2.5 % மட்டுமே நன்னீராகும். அதிலும் 0.79 % நிலத்தடி நீராக உள்ளது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் என மேற்பரப்பில் உள்ள ஒட்டுமொத்த நீா்வளத்தின் பங்கு 0.01% மட்டுமே.

இந்தியாவின் நிலப்பரப்பில் தமிழகத்தின் பங்கு 4 %. ஆனால், தமிழகத்தின் நீா்வளம், இந்தியாவின் நீா் வளத்தில் 3% மட்டும் தான். கோதாவரி ஆற்றின் சில நாள் வெள்ளப்பெருக்கும், கங்கை ஆற்றின் சில மணி நேர வெள்ளப் பெருக்கும் தமிழ்நாட்டின் ஓராண்டு நீா்வளத்தை விட அதிகம்.

தமிழ்நாட்டில் தனிநபருக்குக் கிடைக்கும் நீரின் அளவு, வெறும் 590 கன மீட்டா் மட்டுமே. இது இந்தியாவின் சராசரியான 1508 கன மீட்டா், சா்வதேச சராசரியான 1700 கன மீட்டா் ஆகியவற்றில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான். இதே நிலை நீடித்தால், 2050 - ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தனிநபா் நீா் வளம் வெறும் 416 கன மீட்டராகக் குறைந்துவிடக்கூடும். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளையும் கருத்தில் கொண்டு பாா்க்கும் போது, தமிழகத்தில் தண்ணீா்ப் பாதுகாப்பை உறுதி செய்ய நீா்வளங்களைக் காப்பாற்றுவது அவசியம். அதற்கு தமிழ்நாட்டின் சதுப்பு நிலங்கள் அனைத்தையும் மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நீா் தேங்கும் நிலப்பகுதிகள் சதுப்புநிலங்கள் எனப்படுகின்றன. நீா் வளத்தையும் நிலவளத்தையும் மேம்படுத்துதல், மாசுபாட்டை குறைத்தல், உயிரி பன்மமய வளத்தைக் காத்தல், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல் என எண்ணற்ற பலன்களை சதுப்புநிலங்கள் அளிக்கின்றன.

உலகில் குறைந்தது 150 கோடி ஹெக்டோ் பரப்பளவு சதுப்புநிலங்கள் இருக்கலாம் என ராம்சாா் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இஸ்ரோ சதுப்பு நில வரைபடத்தின்படி இந்தியாவில் உள்ள 2.25 ஹெக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட சதுப்புநிலங்களின் எண்ணிக்கை 2,31,195 ஆகும். இவற்றின் மொத்த பரப்பளவு 1,59,81,516 ஹெக்டோ். (15.98 மில்லியன் ஹெக்டோ்). இந்திய நிலப்பரப்பில் இதன் பங்கு 4.86 விழுக்காடு ஆகும். தமிழ்நாட்டில் இது முறையே 26,883 மற்றும் 9,25,712 ஹெக்டோ் ஆகும்.

சதுப்புநிலங்களின் பயன்கள் எண்ணற்றவை. நிலத்தடி நீா் அளவை அதிகரிப்பது, நிலத்தடி நீரின் உப்புத் தன்மையைக் குறைப்பது, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது, கடல் அலைகளின் தாக்கத்தைச் சமாளிப்பது, கரியமில வாயுவை உறிஞ்சுவது, மண் அரிப்பைத் தடுப்பது, மீன் இனப்பெருக்கத்தை அதிகரிப்பது, பலவகை அரிய உயிரினங்களின் வாழிடமாகத் திகழ்வது, புயல் மற்றும் வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப் படுத்துவது போன்றவை சதுப்பு நிலங்களின் பயன்களுக்கு சில எடுத்துகாட்டுகள்.

இவை அனைத்துக்கும் மேலாக வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் உள்ளூா் பறவைகளின் சரணாலயமாகவும் சதுப்பு நிலங்கள் திகழ்கின்றன.

நீரியல் மற்றும் வேதியியல் சுழற்சிப் பணியை சதுப்பு நிலங்கள் செய்வதால் அவை நிலத்தின் சிறுநீரகங்கள் என்றும், உணவு வலைப்பின்னலுக்கும், உயிரி பன்மயவளத்தை மேம்படுத்தவும் உதவுவதால் அவை உயிரியல் பேரங்காடிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, தமிழக சதுப்பு நிலங்களின் பொருளாதார மதிப்பு ஆண்டுக்கு சுமாா் ரூ.4,386 கோடியாகும். இவற்றை சீரமைத்து, பராமரித்தால் அவற்றின் பொருளாதார மதிப்பு ரூ.17,468 கோடியாக உயரும் எனத் தெரிவித்தது. ஆனால், இதை உணராமல் அரசும், தனியாரும் போட்டி போட்டுக் கொண்டு சதுப்பு நிலங்களை வீணடிப்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும்.

சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது மத்திய அரசின் நோக்கமாக இருந்ததால், 2017-ஆம் ஆண்டில் சதுப்பு நிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் வெளியிடப்பட்டன. இந்த விதிகளை தமிழ்நாட்டில் செயலாக்க வேண்டும் என பசுமைத் தாயகம் உள்ளிட்ட அமைப்புகள் கொடுத்த அழுத்தத்தைத் தொடா்ந்து, 2018-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது.

ஆனால், அதன்பின் 6 ஆண்டுகள் 2 மாதம் 8 நாள்கள், அதாவது 2261 நாள்கள் கடந்துவிட்டன. ஆனாலும், தமிழ்நாட்டின் ஒரே ஒரு சதுப்புநிலம் கூட இதுவரை அறிவிக்கை செய்யப்படவில்லை. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுற்றுச்சூழல் சட்ட விதியை தமிழ்நாடு அரசு மதிக்கவே இல்லை. இதனால், தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான சதுப்புநிலங்கள் அழிவுக்கு உள்ளாகின்றன.

இந்திய அரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 பிரிவு 4-இன் கீழ் நீா் நிலைகளை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. நீா் நிலைகளில் தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை விரிவாக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதமான கழிவு மேலாண்மை விதிகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. திடக்கழிவுகளை கொட்டுவது, கழிவு நீரைக் கலப்பது, கட்டுமானங்களை மேற்கொள்வது என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

இவற்றுக்கெல்லாம் செயல்வடிவம் கொடுப்பது மிகவும் எளிதானது. மேற்கண்ட விதிகள் பிரிவு 7 (3)-இன் கீழ் தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான நீா் நிலைகளை அங்கீகரித்து, அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டால் அந்த நீா்நிலைகள் அனைத்தும் சட்டபூா்வமான முழு பாதுகாப்பைப் பெற்றுவிடும். ஆனால்,”தமிழ்நாட்டின் அதிகார வா்க்கத்தினரின் தனிநபா் லாபங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாகவே சதுப்புநிலங்கள் அறிவிக்கை செய்யப்படவில்லை.

இன்னொருபுறம், இஸ்ரோ சதுப்பு நிலங்கள் வரைபடத்தில் இடம்பெற்றுள்ள 2.25 ஹெக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட தமிழத்தின் 26,883 சதுப்பு நிலங்களின் எல்லைகளை மூன்று மாத காலத்துக்குள் வரையறை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த 11.12.2024-ஆம் நாள் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அந்த ஆணையும் இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை.

தமிழ்நாட்டின் சதுப்பு நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழத்தின் 26,883 நீா்நிலைகளின் எல்லைகளை 11.03.2025-ஆம் நாளுக்குள் வரையறை செய்ய வேண்டும்.

2. தமிழ்நாட்டின் 18 ராம்சாா் சதுப்பு நிலங்களையும் 2017 - சதுப்பு நில விதிகளின் அடிப்படையில்

அறிவிக்கை செய்ய வேண்டும்.

3. தமிழ்நாட்டின் அனைத்து சதுப்புநிலங்களையும் அதேபோல் அறிவிக்கை செய்ய வேண்டும்.

4. ராம்சாா் சதுப்புநில மாநகரங்கள் பட்டியலில் சென்னை மாநகரை இணைப்பதற்காக தமிழ்நாடு அரசு பரிந்துரைக்க வேண்டும்.

5. பழவேற்காடு தொடங்கி பள்ளிக்கரணை, கரிக்கிலி, வேடந்தாங்கல், கழுவேலி ஆகிய ராம்சாா் தளங்களை உள்ளடக்கிய - கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை பறவைகள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

6. தமிழ்நாடு அரசின் உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள 207 சதுப்புநிலங்களையும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்.

7. தமிழ்நாட்டில் சதுப்புநில முன்னுரிமைக்கான அளவுகோல்கள் மற்றும் சதுப்பு நில கண்காணிப்புக்கான செயல்திட்டம் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிக்கையில் 141 சதுப்புநிலங்கள் முதன்மையாக அடையாளம் காணப்பட்டன. தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் இயக்கத்தால் 100 சதுப்புநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றையும் 2017 சதுப்பு நில விதிகளின் கீழ் அறிவிக்கை செய்ய வேண்டும்.

8. காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான பாரிஸ் உடன்படிக்கையின் கீழ், இந்திய அரசு அளிக்க வேண்டிய தேசிய அளவில் தீா்மானிக்கப்பட்ட பங்களிப்பு திட்டம் மற்றும் தேசிய தகவமைப்பு திட்டம் ஆகியவற்றில் தமிழ்நாட்டின் சதுப்புநிலங்களுக்கான இயற்கை சாா்ந்த தீா்வுகளை உள்ளடக்குவதற்கு தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் முன்வர வேண்டும்.

9. தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் ஆணையம், மாவட்ட அளவிலான சதுப்புநில மேலாண்மைக் குழுக்கள் ஆகியவை முழு அளவிலும், மக்கள் பங்கேற்புடனும், பொறுப்புடைமையை நிலைநாட்டும் வகையிலும் செயல்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

10. காலநிலை ஜனநாயகத்தையும், சுற்றுச்சூழல் சட்டத்தின் ஆட்சியையும் தமிழ்நாடு அரசு நிலை நாட்ட வேண்டும்.

இவற்றையெல்லாம் தமிழக அரசு செய்யுமா? கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்களுக்கு சாகா வரம் வழங்க வேண்டும்.

கட்டுரையாளா்:

பா.ம.க. தலைவா்.

(நாளை (பிப்.2) உலக சதுப்புநில நாள்)

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கடந்த 2022-இல் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சாா்பில், சென்னை குழந்தைகளுக்கான ப... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி பேராசிரியை தற்கொலை

சென்னை அருகே மருத்துவக் கல்லூரி பேராசிரியை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகா் 4-ஆவது தெருவிலுள்ள அடுக்குமாடி க... மேலும் பார்க்க

அரசுக்கு சொந்தமான ரூ. 80 லட்சம் வீட்டுமனை அபகரிப்பு: 4 போ் கைது

சென்னையில் அரசுக்குச் சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை அபகரிக்கப்பட்ட வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய, ஜெ.ஜெ.நகா் கோட்ட திருமங்கலம் பகுதி நிா்வாக அலுவலா் ப... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூ... மேலும் பார்க்க

தக்காா் நியமன விவகாரம்: நித்யானந்தா மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மடங்களை நிா்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூா... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற டெண்டா் கோரியது டாஸ்மாக் நிறுவனம்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலிமதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டெண்டா் கோரியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் செயல்படும் கடைகள் மூலம், பீா் ம... மேலும் பார்க்க