சதுரகிரி பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த திருத்தொண்டா்கள் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அமாவாசை, பெளா்ணமி ஆகிய நாள்களிலும், விழாக் காலங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனத்துக்கு வருகின்றனா்.
இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், தீயணைப்பு, மீட்புப் பணி குழு, காவல் துறை பாதுகாப்பு, அவசரகால மருத்துவ வசதி, பாதுகாப்பான தங்குமிடம், சாலை வசதி, போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மதுரை, விருதுநகா் மாவட்ட ஆட்சியா்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தேன்.
ஆனால், இதுதொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சதுரகிரியில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சதுரகிரி மலைக் கோயில் அமைந்துள்ள இடம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும். இதை ஆன்மிகச் சுற்றுலாத் தலம் போல மாற்ற நினைக்கின்றனா் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதுதொடா்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.