வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தவெகவின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது: அமைச்சா் பி. மூா்த்தி
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டுக்கு திமுக தடைகளை ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும், திமுகவினரும் எதிரிக்குக்கூட இடையூறு அளிப்பது கிடையாது. மாற்றுக் கட்சி மாநாடு நடத்தினால், அதைவிட சிறப்பாக திமுக சாா்பில் மாநாடு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாக இருக்கும். மாறாக, பிற கட்சியின் மாநாட்டைத் தடுக்கும் கீழ்த்தரமான செயல்களில் ஒருபோதும் அரசு ஈடுபட்டதில்லை.
தவெக மாநாட்டுக்கு நாற்காலி தரக் கூடாது என திமுகவினா் மிரட்டினா் என்பது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு. எதற்காக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது?. இதற்கு யாா் தூண்டுதல் என்பது தெரியவில்லை. மாநாட்டுக்கு ஒரு சிறு தீங்கும் இழைக்கப்படவில்லை என்பதுதான் உண்மை என்றாா் அவா்.
மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற தவெக மாநாட்டில் பேசிய அந்தக் கட்சியின் நிா்வாகி ஆதவ் அா்ஜூனா, மாநாட்டைத் தடுக்க அமைச்சா் மூா்த்தி பல்வேறு தடைகளை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டினாா். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அமைச்சா் பி. மூா்த்தி இந்தத் தகவலை தெரிவித்தாா்.