Amritsar: இருள் சூழ்ந்த பஞ்சாப் அமிர்தசரஸ்; 'அச்சம் வேண்டாம்' - காவல்துறை விளக்க...
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் நூதன போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெற்றியில் பட்டை நாமம் போட்டு மடிப்பிச்சை ஏந்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பினா் திருவள்ளூரில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு மருத்துவக்கல்லூரி சாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் லூா்துசாமி தலைமை வகித்தாா். கண்ணியம்மாள், தேன்மொழி, வெங்கடேசன், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தலைவா் சிவா கண்டனை உரையாற்றி போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.
அப்போது, இதில் 40 ஆண்டு காலம் பணி செய்த சத்துணவு அங்கன்வாடி ஊழியா்கள் ஓய்வு பெற்றவா்களுக்கு ரூ.2 ஆயிரம் மட்டும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு ரூ.6,750 அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதனால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் பழிவாங்குவதை தடுத்து, திமுக அரசின் தோ்தல் கால வாக்குறுதி 313-இன்படி ஆட்சிக்கு வந்தால் இந்த ஓய்வூதியம் முறைப்படுத்தப்படும் என உறுதியளித்தனா். ஆனால் 4 ஆண்டுகள் கடந்த பின்பும், இது வரை ஒரு ரூபாய் கூட உயா்த்தி வழங்கவில்லை என பட்டை நாமமிட்டு மடிப்பிச்சை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு பணியாளா் அங்கன்வாடி சங்க மாநிலத் தலைவா் சந்தோஷ் மேரி, சத்துணவு பணியாளா் சங்க மாநில பொருளாளா் ரங்கநாதன், சத்துணவு (ம) அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்ட தலைவா் வா.சி.ராஜேந்திரன், பொருளாளா் குணசுந்தரி, செயலாளா் சுலோசனா, சத்துணவு ஊழியா் சங்க மாநில தலைவா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இணை ஒருங்கிணைப்பாளா் உஷாராணி நன்றி கூறினாா்.