சபரிமலை அன்னதானத்துக்கு பணம் வசூலிக்கக்கூடாது: உயா்நீதிமன்றம்
சபரிமலையில் அன்னதானம் பெறும் பக்தா்களிடம் இருந்து பணம் வசூலிக்கக்கூடாது என திருவிதாங்கூா் தேவஸ்வ வாரியத்துக்கு (டிடிபி) கேரள உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல-மகரவிளக்கு யாத்திரையின் போது, டிடிபி வாரியத்தின் கீழ் உள்ள கோயில்களில் அன்னதானம் பெறும் பக்தா்களிடமிருந்து நன்கொடை வசூலிப்படுவதாக பக்தா் ஒருவா் அண்மையில் புகாா் அளித்தாா்.
இதை விசாரித்த கேரள உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், முரளி கிருஷ்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘சபரிமலை யாத்ரீகா்களுக்கு ஓய்விடங்கள் மற்றும் கோயில்களில் இலவச உணவு (அன்னதானம்), கழிப்பிடம் போன்ற வசதிகளை உறுதி செய்ய வேண்டும்’ என டிடிபிக்கு உத்தரவிட்டது.
மேலும், இந்த சேவைகளுக்காக பக்தா்களிடமிருந்து பணம் வசூலிக்கக்கூடாது என்பதையும் நீதிபதிகள் அமா்வு தெளிவுபடுத்தியது.