`சமுதாயம் நிலைக்க குடும்பத்துக்கு 3 குழந்தைகள் அவசியம்' - மோகன் பகவத் வலியுறுத்தல்!
``நாட்டில் மக்கள்தொகை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. அதேசமயம் சிறுபான்மை சமுதாய மக்கள் தொகை அதிகரித்து வருகிறது" என இந்து அமைப்புகள் கூறிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ''குழந்தை பிறப்பு விகிதம் 2.1 சதவீதத்திற்கும் கீழ் சென்றால் சமுதாயம் அழிந்துவிடும். எனவே சமுதாயமும், இந்திய கலாசாரமும் நிலைத்திருக்க வேண்டுமானால் ஒவ்வொரு குடும்பத்திலும் 3 குழந்தைகளாவது இருக்கவேண்டும்.
இந்திய மக்கள்தொகை கொள்கையும் பிறப்பு விகிதம் 2.1 சதவீதம் இருக்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதாவது குடும்பத்திற்கு 3 குழந்தைகளாவது இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு குழுவில் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறதோ அந்த குழு நாளடைவில் அழிந்துவிடும் என்று மக்கள்தொகை அறிவியல் கூறுகிறது. இந்த அழிவு வெளியில் இருந்து வராது என்றும், எந்த ஒரு பேரழிவையும் சந்திக்காமல் அது தானாக நடந்துவிடும் என்றும் அது கூறுகிறது.
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களுக்குள் பொதுவான ஒரு பந்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். இரண்டு சகோதரர்கள் வேறுபட்டு இருந்தாலும், அவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒற்றுமை அவசியம். நமது கலாசாரம் அனைவரையும் ஏற்றுக்கொள்கிறது. நமது கலாசாரம் வீட்டிலிருந்துதான் வருகிறது. சுயநலம், ஈகோ போன்றவற்றால் உலகம் மோசமான மோதல்களைச் சந்தித்துள்ளது. எனவே கலாசாரத்தை பின்பற்றவேண்டியது அவசியம். இந்திய மத நூல்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்கு இடமில்லை'' என்று அவர் தெரிவித்தார்.