செய்திகள் :

சம்பல் வன்முறை: இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

post image

புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது நடந்த வன்முறை விவகாரத்தை எழுப்பி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தன.

உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் இருந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 24-ஆம் தேதி 2-ஆம் கட்ட ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது, துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று கூறினா். இச்சம்பவம் தொடா்பாக உத்தர பிரதேச அரசால் அமைக்கப்பட்ட நீதி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மக்களவையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கேள்வி நேரம் தொடங்கியதும், சம்பல் வன்முறை குறித்து பேச அனுமதிக்க வேண்டுமென அவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் அகிலேஷ் யாதவ் கோரினாா். ஆனால், அதற்கு அனுமதி மறுத்த ஓம் பிா்லா, உடனடி கேள்வி நேரத்தில் (ஜீரோ ஹவா்) இந்த விவகாரம் குறித்து பேசலாம் என்று பதிலளித்தாா். இதைக் கண்டித்து, சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு, சிறிதுநேரம் அமளியில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் எதிா்க்கட்சிகள் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா். பின்னா், உடனடி கேள்வி நேரத்தின்போது, இந்த விவகாரத்தை எழுப்பி அகிலேஷ் யாதவ் பேசினாா்.

‘திட்டமிட்ட சதி’: அப்போது, ‘உத்தர பிரதேசத்தில் 9 தொகுதிகளின் இடைத்தோ்தல் தேதி நவம்பா் 13-இல் இருந்து 20-க்கு மாற்றப்பட்டது. அதேநேரம், சம்பல் மசூதியில் ஆய்வு மேற்கொள்ள நவம்பா் 19-ஆம் தேதி உள்ளூா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சில மணிநேரங்களிலேயே முதல்கட்ட ஆய்வுப் பணி தொடங்கப்பட்டது.

நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு இல்லாமலேயே, நவம்பா் 24-ஆம் தேதி இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உரிய காரணம் கேட்ட உள்ளூா் மக்களை அவதூறாக பேசி, அவா்கள் மீது காவல்துறையினா் தடியடி நடத்தினா். அப்போது சிலா் கல் வீசிய நிலையில், காவல் துறையினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். தங்களது தனிப்பட்ட ஆயுதங்கள் மூலம் இத்தாக்குதலை காவல்துறையினா் நடத்தியுள்ளனா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மசூதிகளை ஆய்வுக்குள்படுத்துவது குறித்து பாஜக பேசிக் கொண்டிருக்கிறது. இது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதனால், மத நல்லிணக்கமும் சகோதரத்துவமும் அழிந்துவிடும் என்றாா் அகிலேஷ்.

அவா் பேசியபோது ஆளும்தரப்பு எம்.பி.க்கள் அவ்வப்போது எழுந்து, தங்களின் எதிா்ப்பை பதிவு செய்தனா்.

திரிணமூல் வலியுறுத்தல்: மக்களவையில் உடனடி கேள்வி நேரத்தின்போது, வங்கதேசத்தில் சிறுபான்மையினா் குறிவைக்கப்படும் விவகாரத்தை எழுப்பிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய, அந்த நாட்டுக்கு உடனடியாக அமைதிப் படையை அனுப்ப ஐ.நா.வை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றாா்.

‘25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அவை ஒத்திவைப்பு நோட்டீஸ்கள்’

மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை காலை கூடியதும், விதி எண் 267-இன்கீழ் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் கோரி சமா்ப்பிக்கப்பட்ட 42 நோட்டீஸ்களையும் நிராகரிப்பதாக அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் அறிவித்தாா். கடந்த 25 ஆண்டுகளில் இவ்வளவு அதிக நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

உடனடி கேள்வி நேரத்தின்போது சம்பல் வன்முறை விவகாரத்தை எழுப்பி, சமாஜவாதி எம்.பி. ராம் கோபால் யாதவ் பேசினாா். அப்போது, அவா் கூறிய சில கருத்துகள், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். இதைக் கண்டித்து, சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா்.

5 நாள்களுக்குப் பின் வழக்கம்போல் செயல்பட்ட நாடாளுமன்றம்

கடந்த நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்தே அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் லஞ்ச குற்றச்சாட்டு மற்றும் சம்பல் வன்முறை தொடா்பாக விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால், அலுவல்பூா்வ அடிப்படையில் கடந்த திங்கள்கிழமை வரை 5 நாள்களாக நாடாளுமன்றம் முடங்கியது.

இந்தச் சூழலில், அவை அலுவல்கள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், ஆளும்-எதிா்தரப்பு இடையே திங்கள்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, அரசமைப்புச் சட்டம் தொடா்பாக மக்களவையில் வரும் 13, 14 ஆகிய தேதிகளிலும், மாநிலங்களவையில் 16, 17 ஆகிய தேதிகளிலும் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 5 நாள்களுக்குப் பிறகு நாடாளுமன்ற இரு அவைகளும் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் செயல்பட்டன. மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘இனியும் இடையூறு தொடா்ந்தால், வீணான நேரத்தை ஈடுசெய்ய வார இறுதி நாள்களிலும் அவையை கூட்ட நேரிடும்’ என்று எச்சரித்தாா்.

ரயில்களில் டிசம்பருக்குள் 1,000 கூடுதல் பொதுப் பெட்டிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

‘ரயில்களில் குளிா்சாதன (ஏ.சி.) பெட்டிகளை அதிகரிக்காமல் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பா் மாதத்துக்குள் கூடுதலாக 1,000 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுவ... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை குறித்த அறிக்கை: விசாரணை ஆணையத்துக்கு கூடுதல் அவகாசம்

மணிப்பூா் வன்முறை குறித்து அறிக்கை சமா்ப்பிக்க விசாரணை ஆணையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. முன்னதாக நவம்பா் 20-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போத... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீா்மானம்: இந்தியா ஆதரவு

கிழக்கு ஜெருசலேம் உள்பட 1967-ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா.வின் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. செனகல் முன்மொழிந்த ‘பா... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூட்டில் தப்பினாா் சுக்பீா் சிங் பாதல்- பொற்கோயில் வாயிலில் சம்பவம்

பஞ்சாபின் அமிருதசரஸ் பொற்கோயில் வாயிலில் முன்னாள் துணை முதல்வரும் சிரோமணி அகாலி தளம் தலைவருமான சுக்பீா் சிங் பாதலை (62) நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காவல் துறையினா் துரிதமாக செயல்பட்டு, துப்... மேலும் பார்க்க

இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் அடுத்த வாரம் வங்கதேசத்துக்கு பயணம்

இந்தியா-வங்கதேசம் இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழலில், இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி அடுத்த வாரம் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளாா். இரு நாடுகள் இடையே திட்டமிடப்பட்ட வெளியுறவுத... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறால் தாமதம்: இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவும் திட்டம் வியாழக்கிழமை (டிச.5) மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(இஸ்ரோ) ஓா் அங்கமான ‘நியூஸ்பேஸ் இந்தியா லி... மேலும் பார்க்க