ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்திய அணி - இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்!
சலவைத் தொழிலும் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வரும்: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: துணிகளை துவைத்து உலர்த்தி தரும் தொழிலானது, உற்பத்தி துறை என்ற அடிப்படையில், தொழிற்சாலை சட்டத்தின் கீழ் தகுதி பெறுகிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முக்கிய வழக்கு ஒன்றில் குறிப்பிடத்தக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதாவது, தொழிற்சாலைகள் சட்டம், 1948 இன் கீழ், துணிகளை துவைத்தல், காயவைத்தல் மற்றும் உலர்த்துதல் போன்ற தொழில்கள், உற்பத்தித் துறை செயல்பாடு என்ற வரையறைக்குள் வர வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அவை புதிய தயாரிப்புகளை உருவாக்காவிட்டாலும் கூட உற்பத்தித் துறை செயல்பாட்டின் கீழ் வரும் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி மேற்கொள்ளப்படும் சலவைத் தொழிலானது, தொழிற்சாலை என்ற வரையறைக்குள் வருவதால் அது தொழிற்சாலைகள் சட்டம், 1948, பிரிவு 2(எம்)-இன் கீழ் வரும் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
தொழிற்சாலைகள் சட்டம் 1948-ஐ மீறியதற்காக சலவைத் தொழில்நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக, ஜேஎம்எஃப்சி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கோவா மாநில அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சலவைத் தொழிலானது உற்பத்தி துறை செயல்பாட்டின் கீழ் வராது, எனவே, சலவைத் தொழில் மேற்கொள்ளப்படும் ஆலை என்பதை தொழிற்சாலை என்று குறிப்பிட முடியாது, தொழிற்சாலை சட்டத்தின் கீழ் சலவைத் தொழில் வராது என்று குறிப்பிட்டிருந்தது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டத்தின் பிரிவு 2 (கே) இன் கீழ், சலவைத் தொழிலானது உற்பத்தித் துறை செயல்பாடு தான் என்று மாநில அரசு சார்பில் வாதிடப்பட்டது.
ஏனெனில் துணிகளை துவைத்து சுத்தம் செய்வது பயன்பாட்டுக்கு அல்லது விநியோகத்துக்கு பொருள்களை தயார் செய்வதாக இருப்பதால் உற்பத்தித் துறை செயல்பாட்டுக்குள் வரும். மேலும், சலவைத் தொழில் நிறுவனர், ஒன்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்தியிருப்பதும், துணிகளை சலவை செய்வதற்கு எரிபொருளால் இயக்கப்படும் இயந்திரங்களைப் பயன்படுத்தியிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதா, அந்த ஆலை, தொழிற்சாலை சட்டத்தின் பிரிவு 2 (எம்) இன் கீழ் "தொழிற்சாலை" என்ற வரையறைக்குள் வரும் என்று வாதத்தை முன்வைத்தது.
ஆனால், கோவா மாநில அரசின் வாதத்தை எதிர்த்த சலவைத் தொழில் நிறுவனர், சலவை செய்வதும், உலர்த்துவதும், தொழிற்சாலைகள் சட்டம், 1948ன் கீழ் ஒரு "உற்பத்தித் துறை செயல்பாடு ஆகாது. இந்த தொழிலை தொழிற்சாலைகள் சட்டத்தில் அல்லாமல், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய சேவைத் தொழில் என்று வாதிட்டப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோவா மாநில அரசின் வாதத்தில் இருக்கும் உண்மையை ஏற்றுக்கொண்டு, 1948 தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் சலவைத் தொழில் நடைபெறும் ஆலை ஒரு "தொழிற்சாலை" தான். மேலும் துணிகளை துவைத்து சுத்தம் செய்யும் செயல்பாடானது, உற்பத்தித் துறை செயல்பாடாகவே கருதப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.
அதுபோல, துணிகளை துவைத்து சுத்தம் செய்யும் செயல்பாடு ஒரு புதிய பொருளை தயாரித்து உருவாக்கவில்லை என்பதால், அந்த தொழிலானது "உற்பத்தித் துறை செயல்பாட்டின் கீழ் வராது என்ற பிரதிவாதியின் வாதத்தை நீதிமன்றம் நிராகரிப்பதாகவும், தொடர்ந்து, உற்பத்தித் துறை செயல்பாட்டின் வரையறைப்படி, சலவையாளரிடம் வழங்கப்படும் துணிகளை துவைத்து சுத்தம் செய்த பிறகு, வாடிக்கையாளருக்கு பயன்பாட்டிற்காக வழங்கப்படுவதால், அந்த தொழில் தொழிற்சாலை சட்டப்பிரிவு 2(கே) இன் கீழ் உற்பத்தி செயல்பாடு நடந்ததாகவே பொருள் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.