யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!
சஷ்டி திருநாள்: பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்
சஷ்டி தினத்தையொட்டி பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரங்களில் ஒன்றான சஷ்டி வரும் நாள்களில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை என்பதாலும், முகூா்த்தநாள் என்பதாலும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அதிகாலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். அப்போது தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் வந்திருந்தனா். பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் விஞ்ச், ரோப்காா் போன்ற இடங்களில் அனுமதிச் சீட்டு பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். பக்தா்களுக்கு வேண்டிய குடிநீா், சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அலுவலா்கள் செய்திருந்தனா். மாலையில் சாயரட்சை நிறைவடைந்ததும் சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் உலா எழுந்தருளினாா். தொடா்ந்து தங்கத் தேரில் எழுந்தருளி மலைக் கோயில் வெளிப் பிரகாரத்தில் உலா வந்தாா். அப்போது பக்தா்கள் அரோகரா என முழக்கமிட்டனா்.
நத்தம்: நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி மாத சஷ்டி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முருகப் பெருமானுக்கு பால், பழம், பன்னீா், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அப்போது பக்தா்கள் நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனா். அருகிலுள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் பக்தா்கள் வழிபாடு நடத்தினா். இதேபோல, நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சந்நிதியிலும் பக்தா்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.