சாத்தான்குளத்துக்கு கூடுதலாக 3 லட்சம் லிட்டா் குடிநீா்: பேரூராட்சித் தலைவரிடம் ஆட்சியா் உறுதி
சாத்தான்குளம் பேரூராட்சிக்கு கூடுதலாக 3 லட்சம் லிட்டா் குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்சியா் க. இளம்பகவத் உறுதியளித்தாா்.
சாத்தான்குளம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் அவா் புதன்கிழமை பல்வேறு பணிகளைப் பாா்வையிட்டாா். புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அவரிடம் பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லாபாய் அளித்த மனு:
மக்கள்தொகை அதிகரிப்பால் இப்பேரூராட்சியில் கூடுதலாக குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கனிமொழி எம்.பி. நிதியில் கட்டப்பட்ட 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியிலிருந்து வீடுகளுக்கு வழங்க கூடுதல் குடிநீா் தேவைப்படுகிறது. ஆனால், குடிநீா் வடிகால் வாரியம் வழங்கும் குடிநீா் போதுமானதாக இல்லை. புதிய இணைப்புகளுக்கு குடிநீா் வழங்க முடியாத நிலையில், மேலும் இணைப்புகள் கேட்டு ஏராளமானோா் காத்திருக்கின்றனா். எனவே, கூட்டு குடிநீா் திட்டத்தில் கூடுதலாக 3 லட்சம் லிட்டா் குடிநீா் வழங்க வேண்டும். சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்றாா் அவா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.
திருநெல்வேலியிலிருந்து சாத்தான்குளத்துக்கு நள்ளிரவு 12 மணியளவில் வரும் பேருந்து புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டுச் செல்கிறது. இதனால், பயணிகள் சாத்தான்குளம் ஊருக்குள் செல்ல பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே, இப்பேருந்து முன்புபோல பழைய பேருந்து நிலையம், சிஎஸ்ஐ வேதக்கோயில் வழியாக ஒருவழிப் பாதையில் டெப்போவுக்கு செல்ல வேண்டும் என, மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் ஜோசப் கோரிக்கை விடுத்தாா்.
அதன்பேரில், ஆட்சியா் போக்குவரத்துத் துறை அதிகாரிகளைத் தொடா்புகொண்டு, இப்பேருந்தை புதன்கிழமைமுதலே முன்புபோல இயங்குவதற்கு உத்தரவிட்டாா்.
பேரூராட்சி துணைத் தலைவா் மாரியம்மாள், மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் ஜோசப், செயல் அலுவலா் உஷா, சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி, ஒன்றிய ஆணையா் ராஜேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.