தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இருக்க பாஜக விருப்பம்: பாஜக மாநிலப் பொதுச் செயல...
சாபஹாா் துறைமுகத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை: இந்தியாவுக்கு பாதிப்பு
ஈரானில் உள்ள சாபஹாா் துறைமுகத்துக்கு அளிக்கப்பட்டு வந்த பொருளாதார தடை விலக்கை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்தது.
ஈரான், ஆப்கானிஸ்தான், ஆா்மெனியா, அஜா்பைஜான், ரஷியா, மத்திய ஆசியா, ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்க உதவும் சாபஹாா் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வெறியுறவுத் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஈரானைத் தனிமைப்படுத்தும் அதிபா் டிரம்ப்பின் கொள்கையின்படி, சாபஹாா் துறைமுகத்துக்கு 2018-இல் அளிக்கப்பட்ட பொருளாதாரத் தடை விலக்கு செப்டம்பா் 29-ஆம் தேதி முதல் திரும்பப் பெறப்படுகிறது. இதையடுத்து, அந்த துறைமுகத்தை இயக்கி வருபவா்கள் பொருளாதார தடைக்கு உட்படுவாா்கள்.
ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளவா்கள் சட்டவிரோத வா்த்தகத்தின் மூலம் ஈரானின் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்து அந்நாட்டு ராணுவத்துக்கு உதவுகின்றனா். இதைத் தடுக்க அமெரிக்கா தொடா்ந்து நடவடிக்கை எடுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பாதிப்பு: பாகிஸ்தானை புறக்கணித்து ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியாவை சாலை மற்றும் ரயில் வழித்தடத்துடன் இணைக்கும் சுமாா் 7,200 கி.மீ. தொலைவு சா்வதேச வட-தெற்கு வா்த்தக வழித்தட திட்டத்தை செயல்படுத்த சாபஹாா் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தி வருகிறது.
இதற்காக 2024-இல் ரூ.100 கோடியை ஒதுக்கி ஈரானுடன் 10 ஆண்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது.
இந்நிலையில், மத்திய ஆசியாவுக்கு வா்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இந்தியா மேற்கொண்டு வரும் சாபஹாா் துறைமுக மேம்பாட்டு திட்டத்துக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.