பிகார்: ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவுக்கு பிரசாந்த் கிஷோா் அழைப்பு!
சாப்பாடு வரத் தாமதமானதால் வேறு பெண்ணைத் திருமணம் செய்த மணமகன்; போலீஸிடம் சென்ற மணமகள் வீட்டார்!
உத்தரப்பிரதேசத்தில், சந்தௌலி மாவட்டத்தில் மணமகன் ஒருவர் சாப்பாடு வரத் தாமதமான காரணத்தினால் ஆத்திரத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து மணமகள் வீட்டாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரையில் மணமகளின் கூற்றுப்படி, மெஹ்தாப் என்ற நபருடன் 7 மாதங்களுக்கு முன்பாகவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்றுவந்தது. இத்தகைய சூழலில், டிசம்பர் 22-ம் தேதி மணமகன் மற்றும் வீட்டார் ஹமித்பூர் கிராமத்திலுள்ள மணமகள் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். அப்போது, மணமகன் வீட்டாருக்கு உணவு வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்படவே, மணமகனின் நண்பர்கள் கிண்டல் செய்திருக்கின்றனர்.
இதில் ஆத்திரமடைந்த மெஹ்தாப்பும் அவரது குடும்பத்தினரும் மணமகள் வீட்டாரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். கிராமத்துப் பெரியோர்கள் சமாதானம் செய்ய முயற்சித்த போதிலும் மணமகன் வீட்டார் சமாதானமாகவில்லை. அதோடு, அடுத்த சில மணிநேரத்திலேயே மெஹ்தாப் தனது உறவினர் பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த மணமகள் வீட்டார், திருமண செலவு தங்களுக்கு ரூ. 7 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகவும், கூடுதலாகத் திருமண நிகழ்ச்சிக்கு முன்பாக மணமகன் வீட்டாரிடம் ரூ. 1.5 லட்சம் கொடுத்ததாகவும் போலீஸில் புகாரளித்தனர்.
மேலும், மணமகள் இந்த விஷயத்தை காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) ஆதித்யா லாகேவிடம் கொண்டுசென்றனர். அதையடுத்து இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், மணமகள் வீட்டாருக்கு இழப்பீடாக ரூ.1.61 லட்சம் திருப்பித் தருவதாக மணமகன் வீட்டாரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...