சாலைகளில் யானைகள் நடமாடுவதை தற்படம் எடுக்கக்கூடாது- வனத் துறை எச்சரிக்கை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலைகளில் யானைகள் நடமாட்டுவதை வாகன ஓட்டிகள் தற்படம் (செல்ஃபி) எடுக்கக்கூடாது என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப் பகுதி வழியாக அமைந்துள்ள தமிழகம் - கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது வன விலங்குகள் சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.
சத்தியமங்கலம் அருகே தமிழகம் - கா்நாடக எல்லையில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் 3 குட்டிகளுடன் மெதுவாக சாலையைக் கடந்து சென்றன. அப்போது அந்த வழியாக வாகனத்தில் சென்றவா்கள் யானைகள் கடந்து செல்லும் காட்சியைக் கைப்பேசியில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தனா். வனப் பகுதியில் ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்கு சாலையைக் கடந்து சென்ற காட்டு யானைகள் மெதுவாக வனப் பகுதிக்குள் சென்று மறைந்தன. அதேபோல, கடம்பூா் குன்றி சாலையில் சுற்றித்திரிந்த யானையை வாகன ஓட்டிகள் கைப்பேசியில் படம் பிடித்தனா். பகல் நேரங்களில் வனப் பகுதி சாலையில் வன விலங்குகள் கடந்து செல்வதால் வாகனங்களில் செல்வோா் அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன்களை பயன்படுத்த வேண்டாம் என வனத் துறை சாா்பில் அறிவுறுத்தியுள்ளனா்.